2 Samuel 10 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 இதன்பிறகு அம்மோனியரின் மன்னன் இறந்தான்; அவனுக்குப் பதிலாக அவன் மகன் ஆனூன் அரசாண்டான்.2 ‘நாகாசின் மகன் ஆனூனுடன் நான் நம்பிக்கைக்குரியவனாய் நடந்து கொள்வேன்; ஏனெனில், அவன் தந்தையும் என்னோடு அவ்வாறே நடந்துகொண்டார்’ என்று தாவீது கூறினார். அவனுடைய தந்தையைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தாவீது தம் பணியாளரை அனுப்பினார். தாவீதின் பணியாளரும், அம்மோனியர் நாட்டுக்குச் சென்றனர்.3 “ஆறுதல் கூறுமாறு ஆள்களை அனுப்பியதால் தாவீது உன் தந்தையை மேன்மைப்படுத்துகிறார் என்று நினைக்கிறாயோ? நகரைக் கண்டு, வேவுபார்த்து அதை அழிக்கவன்றோ உன்னிடம் தாவீது தம் பணியாளரை அனுப்பியுள்ளார்!” என்று ஆனூனிடம் அம்மோனியத் தலைவர்கள் கூறினார்கள்.4 எனவே, ஆனூன் தாவீதின் பணியாளரைப் பிடித்து அவர்களுடைய தாடியில் ஒரு பகுதியைச் சிரைத்து அவர்களுடைய ஆடைகளை இடுப்புவரை கத்தரித்து அவர்களை அனுப்பி வைத்தான்.5 இது தாவீதுக்கு அறிவிக்கப்பட, அவரும் தம் பணியாளரைச் சந்திக்க ஆளனுப்பினார். ‘உங்கள் தாடிகள் வளரும்வரை எரிகோவில் தங்கி, பிறகு திரும்புங்கள்’ என்று அரசர் சொல்லியனுப்பினார். ஏனெனில், அவர்கள் மிகவும் அவமானப்பட்டிருந்தனர்.⒫6 அம்மோனியர் தாங்கள் தாவீதின் வெஞ்சினத்திற்கு உள்ளானதைக் கண்டனர். அவர்கள் ஆளனுப்பி பெத்ரகோபிலிருந்தும் சோபாவிலிருந்தும் இருபதாயிரம் காலாள் படையினரையும், மாக்கா நாட்டு அரசரோடும் ஆயிரம் ஆள்களோடு தோபிலிருந்து பன்னீராயிரம் ஆள்களையும் கூலிக்கு அமர்த்தினர்.7 தாவீது இதைக் கேட்டு, யோவாபையும் வலிமை மிகு வீரர் அனைவரையும் அனுப்பினார்.8 அம்மோனியர் புறப்பட்டு வந்து நுழைவாயில் அருகே போருக்காக அணிவகுத்தனர். சோபாவிலிருந்தும் இரகோபிலிருந்தும் வந்த சிரியர்களும் தோபையும் மாக்காவையும் சார்ந்த ஆள்களும் திறந்த வெளியில் தனியாக இருந்தனர்.⒫9 தனக்கு எதிராக முன்னும் பின்னும் போரணிகள் இருந்ததைக் கண்ட யோவாபு இஸ்ரயேலின் வலிமை மிகு வீரருள் சிலரைத் தேர்ந்தெடுத்து சிரியருக்கு எதிராக நிறுத்தினார்.10 மீதியானவரைத் தம் சகோதரன் அபிசாயின் பொறுப்பில் ஒப்படைத்தார்; அவன் அவர்களை அம்மோனியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினான்.11 மேலும், யோவாபு “சிரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும்.12 நம் மக்களுக்காகவும் நம் கடவுளின் நகர்களுக்காகவும் நாம் வீறுகொண்டு போரிடுவோம், ஆண்டவர் தம் விருப்பப்படி செய்யட்டும்” என்று கூறினார்.13 யோவாபும் அவரோடு இருந்தவர்களும் சிரியருக்கு எதிராகப் போரிடுமாறு அணிவகுத்துச் சென்றனர்; சிரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.14 சிரியர் தப்பியோடியதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயிடமிருந்து தப்பியோடி நகருக்குள் வந்தனர். அம்மோனியருடன் போரிட்ட யோவாபு எருசலேமுக்குத் திரும்பிவந்தார்.⒫15 இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்ட சிரியர் மீண்டும் ஒன்றாகக் கூடினர்.16 அததேசர் ஆளனுப்பி யூப்பிரத்தீசு ஆற்றுக்கு அப்பால் இருந்த சிரியரையும் திரட்டிக் கொண்டு வரச்செய்தான். படைத்தலைவனான சோபாக்கின் தலைமையில் அவர்கள் ஏலாமுக்கு வந்தனர்.17 தாவீது இதைக் கேட்டவுடன், அனைத்து இஸ்ரயேலையும் ஒன்று திரட்டி, யோர்தானைக் கடந்து ஏலாமுக்கு வந்தார். சிரியர் தாவீதுக்கு எதிராக அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.18 சிரியர் இஸ்ரயேலருக்கு முன்பாகப் புறமுதுகாட்டி ஓடினர். சிரியருள் எழுநூறு தேர்வீரர்களையும், நாற்பதாயிரம் குதிரை வீரர்களையும் தாவீது கொன்றார்; மேலும் படைத்தலைவன் சோபாக்கை அவர் வாளால் தாக்க, அவனும் அங்கே மடிந்தான்.19 அததேசருக்குக் கப்பம் கட்டிவந்த மன்னர்கள் அனைவரும் இஸ்ரயேலரிடம் தாங்கள் தோற்றதைக் கண்டு, அவர்களோடு சமாதானம் செய்து அவர்களுக்குப் பணிந்திருந்தனர். இதற்குப்பின் சிரியர் அம்மோனியருக்கு உதவ அஞ்சினர்.