1 நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
2 ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள்.
3 அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4 நாகமானும் அவனது எஜமானிடம் (அரசனிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.
5 ஆராமின் அரசனும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான். எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான்.
6 அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரவேல் அரசன் கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த. அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் அரசன் முயற்சி செய்கிறான்” என்றான்.
8 அரசன் வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.
9 ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான்.
10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன்.
12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.
14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.
15 நாகமானும் அவனது குழுவும் தேவ மனிதனிடம் (எலிசாவிடம்) திரும்பி வந்தனர். நாகமான் எலிசாவின் முன் நின்று, “உலகம் முழுவதிலும் பாரும், இஸ்ரவேலைத் தவிர வேறெங்கும் தேவன் இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டேன்! இப்போது உமது வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான்.
16 ஆனால் எலிசாவோ, “நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். நான் எவ்வித அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கர்த்தர் மீது ஆணையிட்டுள்ளேன்” என்றான். நாகமான் எவ்வளவோ முயன்று பார்த்தான். எலிசாவோ அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
17 பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்!
18 என் எஜமான் (அரசன்) போலித் தெய்வமான ரிம்மோனின் ஆலயத்திற்குள் போய் தொழுகைச் செய்யும்போது நானும் அவனோடு போகவேண்டியதிருக்கும். என் மீது சாய்ந்துக்கொள்ள அரசன் விரும்புவான். எனவே அந்த ரிம்மோனின் ஆலயத்திற்குள் வணங்கிக் குனியவேண்டியதிருக்கும் அதற்காக இப்போதே கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
19 பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான்.
20 ஆனால் தேவமனிதனின் (எலிசாவின்) வேலைக்காரனான கேயாசி, “பாருங்கள் எனது எஜமானன் (எலிசா) ஆராமியனான, நாகமானிடமிருந்து அவன் கொண்டுவந்த எவ்வித அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் போக அனுமதித்திருக்கிறார்! நான் அவன் பின்னால் ஓடிப்போய் கொஞ்சம் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி,
21 நாகமானின் பின்னால் ஓடினான். இவன் வருவதைக் கவனித்த நாகமான். இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சரியாய் உள்ளதா?” என்று கேட்டான்.
22 அதற்கு கேயாசி, “எல்லாம் சரியாக உள்ளது. எனது எஜமானர் அனுப்பினார். தீர்க்கதரிசிகளின் குழுவில் இருந்து இரண்டு இளைஞர்கள் எப்பிராயீம் மலைநாட்டிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தயவுசெய்து 75 பவுண்டு வெள்ளியும் இரண்டு மாற்று ஆடைகளையும் கொடுக்கவேண்டும்” என்றான்.
23 அதற்கு நாகமான், “தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க” என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான்.
24 கேயாசி குன்றுக்கருகில் வந்ததும் வேலைக்காரர்களிடம் இருந்து அவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டான். தன் வீட்டிற்குள் அவற்றை மறைத்தான்.
25 அவன் வந்து எஜமான் (எலிசாவின்) முன் நின்றதும் எலிசா அவனிடம், “எங்கே போயிருந்தாய் கேயாசி?” எனக் கேட்டான். அதற்கு கேயாசி, “எங்கும் போகவில்லையே!” என்றான்.
26 எலிசா அவனிடம், “இது உண்மை இல்லை! நாகமான் இரதத்திலிருந்து இறங்கி உன்னை எதிர்கொண்டபோதே என் மனம் உன்னோடு வந்துவிட்டதே. பணம், ஆடை, ஒலிவ எண்ணெய், திராட்சை, ஆடு, பசுக்கள், ஆண்கள் அல்லது பெண்கள் அடிமைகள் போன்றவற்றை அன்பளிப்பாகப் பெறும் காலம் இதுவல்ல.
27 இப்போது நீயும் உன் பிள்ளைகளும் நாகமானின் நோயைப் பெறுவீர்கள். உனக்கு இனி எப்போதும் தொழுநோய் இருக்கும்!” என்றான். கேயாசி எலிசாவை விட்டு விலகியதும் அவனது, தோல் பணியைப்போன்று வெளுத்தது! அவன் தொழுநோயாளியானான்.
2 Kings 5 ERV IRV TRV