2 Chronicles 26 in Tamil TRV Compare Thiru Viviliam
1 பின்னர், யூதா மக்கள் யாவரும் பதினாறு வயதுடைய* உசியாவை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.2 அரசன் தன் மூதாதையருடன் துயில் கொண்டபின், ஏலோத்தைக் கட்டியெழுப்பி, அதனை யூதாவுக்குச் சொந்தமாக்கினவன் இவனே.⒫3 உசியா அரியணை ஏறியபோது, அவனுக்கு வயது பதினாறு. எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேமைச் சேர்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.4 அவன் தன் தந்தை அமட்சியாவைப் போலவே ஆண்டவரின் பார்வையில் யாவற்றிலும் நேர்மையாக நடந்து கொண்டான்.5 இறையச்சத்தில் தன்னைப் பயிற்றுவித்த செக்கரியாவின் வாழ்நாள் முழுவதும், உசியா கடவுளையே நாடினான். அவன் ஆண்டவரைத் தேடிய காலமெல்லாம் கடவுள் அவனுக்கு வெற்றியை அளித்தார்.⒫6 பின்பு, பெலிஸ்தியருடன் போரிட்டு, காத்து, யாப்னே, அஸ்தோது ஆகியவற்றின் மதில்களைத் தகர்த்தெறிந்தான்; அஸ்தோதைச் சுற்றிலும் பெலிஸ்திய நாட்டிலும் நகர்களை எழுப்பினான்.7 பெலிஸ்தியரையும், கூர்ப்பாகாவில் குடியிருந்த அரேபியரையும், மெயோனியரையும் வெல்லக் கடவுள் அவனுக்குத் துணைபுரிந்தார்.8 அம்மோனியர் உசியாவுக்குக் கப்பம் கட்டினர்; அவன் ஆற்றல் மிக்கவனாய் விளங்கியதால், அவனது புகழ் எகிப்தின் எல்லைமட்டும் பரவியது.⒫9 உசியா எருசலேமில் மூலை வாயில் மேலும், பள்ளத்தாக்கு வாயில் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் கொத்தளங்களை எழுப்பி அவற்றை வலுப்படுத்தினான்.10 அவன் பாலைநிலத்திலும் கொத்தளங்களைக் கட்டி, பல கிணறுகளையும் வெட்டினான். அவனுக்கு பள்ளத்தாக்கிலும் சமவெளியிலும் ஏராளமான ஆடுமாடுகள் இருந்தன; மலைப் பகுதியிலும் வயல்வெளிகளிலும் அவனுக்கு வேளாண்மை செய்வோரும், திராட்சை பயிரிடுவோரும் இருந்தனர். ஏனெனில், அவன் பயிரிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தான்.⒫11 உசியாவுக்குப் போர்த் திறனுடைய படை ஒன்று இருந்தது. அது எழுத்தர் எயீயேல், அலுவலர் மகசேயா ஆகியோரால் வகுக்கப்பட்டு, அரச அலுவலர் தலைவர்களில் ஒருவரான அனானியாவின் தலைமையில் போருக்கு எப்பொழுதும் தயாராக இருந்தது.12 இப்போர்வீரர்களின் குடும்பத் தலைவர்கள் மொத்தம் இரண்டாயிரத்து அறுநூறு பேர்.13 அவர்களின் பொறுப்பில் மூன்று இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு வீரர் கொண்ட ஆற்றல்மிகு படை இருந்தது. அது எதிரியோடு மிகுந்த வலிமையுடன் போரிடுவதில் அரசனுக்குத் துணைநின்றது.14 உசியா தன் படையினர் அனைவருக்கும் கேடயம், வேல், தலைச்சீரா, மார்க் கவசம், வில், கவண் கற்கள் ஆகியவற்றைச் செய்தான்.15 அம்பு எய்வதற்கும், பெரிய கற்களை வீசுவதற்கும் திறமை மிக்கோரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளை எருசலேமில் செய்து கொத்தளங்கள் மேலும், கோட்டைகளின் மூலைகள் மேலும் அவற்றை நிறுவினான். அவன் வியத்தகு முறையில் கடவுளிடமிருந்து உதவி பெற்று, வலிமை அடைந்ததால் அவன் புகழ் வெகுதூரம் பரவியது.16 உசியா வலிமைமிக்கவன் ஆனபோது, தான் அழிவுறும் அளவுக்கு ஆணவம் கொண்டான். தன் கடவுளாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், தூபபீடத்தின்மேல் தானே தூபம் காட்ட ஆண்டவரின் இல்லத்தில் நுழைந்தான்.17 ஆனால், குரு அசரியாவும் அவருடன் ஆண்டவரின் எண்பது வலிமைமிகு குருக்களும் தொடர்ந்து சென்றனர்.18 அவர்கள் அரசன் உசியாவைத் தடுத்து நிறுத்தி, அவனிடம், “ஓ உசியா! ஆண்டவருக்குத் தூபம் காட்டுவது உமது வேலையன்று; தூபம் காட்டுவதற்கெனத் திருநிலைப்படுத்தப்பட்டவரும், ஆரோனின் புதல்வருமான குருக்களுக்கே உரிய பணி அது! ஆதலால், திருத்தலத்தைவிட்டு வெளியே செல்லும்! நீர் செய்வது தவறு! நீர் கடவுளாகிய ஆண்டவரால் மேன்மை பெறமாட்டீர்” என்றனர்.⒫19 அப்பொழுது உசியா சினமுற்றான்; இவ்வாறு அவன், தூப கலசத்தைக் கையில் பிடித்துக்கொண்டே, குருக்கள் மேல் கோபமுற்றபோது, அவர்களுக்கு முன்பாக, ஆண்டவரின் இல்லத்தில் தூபபீடத்திற்கு அருகில், அவன் நெற்றியில் தொழுநோய் கண்டது.20 தலைமைக் குருவான அசரியாவும் மற்ற எல்லாக் குருக்களும் அவன் நெற்றியில் தொழுநோய் பற்றியிருந்ததைக் கண்டனர். உடனே அவர்கள் அவனை அங்கிருந்து வெளியேற்ற முனைந்தனர்.உசியாவும், ஆண்டவர் தன்னைத் தண்டித்ததால், உடனே வெளியேறினான்.21 அரசன் உசியா இறக்கும்வரை ஒரு தொழுநோயாளியாகவே இருந்தான். ஆண்டவரின் இல்லத்திலிருந்து அவன் விலக்கிவைக்கப்பட்டிருந்ததால், ஒரு தொழுநோயாளியாகத் தன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அவன் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி வந்தான்.22 உசியாவின் பிற செயல்களை, தொடக்கமுதல் இறுதிவரை, ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயா எழுதிவைத்துள்ளார்.23 உசியா தன் மூதாதையருடன் துயில்கொண்டான். உசியா ஒரு தொழுநோயாளி என்பதால், அவன் மூதாதையரின் அருகில் அரசர்களுக்குரிய கல்லறை நிலம் ஒன்றில் அவனை அடக்கம் செய்தனர். அவனுக்குப் பிறகு அவன் மகன் யோத்தாம் அரசன் ஆனான்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.