2 Chronicles 23 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.2 இவர்கள் யூதா எங்கும் போய் அதன் நகர்களில் இருந்த லேவியர்களையும், இஸ்ரயேல் குலத் தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.⒫3 சபையார் யாவரும் கடவுளின் இல்லத்தில் யோவாசுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். யோயாதா அவர்களை நோக்கி, “இதோ! அரசனின் மைந்தன்! தாவீதின் புதல்வர்களைக் குறித்து ஆண்டவர் கூறியபடியே, அவன் அரசாள்வான்.4 நீங்கள் செய்ய வேண்டியது இதுவே: ஓய்வு நாளில் பணிபுரியும் குருக்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர வாயிலிலும்,5 இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாம் பகுதியினர் அடித்தள வாயிலிலும் காவல் இருக்க வேண்டும்; மக்கள் எல்லாரும் ஆண்டவரின் இல்லத்து முற்றத்தில் நிற்க வேண்டும்.6 குருக்களையும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் லேவியரையும் தவிர வேறெவனும் ஆண்டவரின் இல்லத்துள் நுழையக் கூடாது. புனிதப்படுத்தப்பட்ட இவர்கள் மட்டுமே நுழையலாம். மக்கள் அனைவரும் ஆண்டவருக்கான காவலில் கருத்தாய் இருப்பார்களாக!7 லேவியர் தங்கள் படைக்கலன்களைத் தாங்கியவராய், அரசனை எப்பக்கமும் சூழ்ந்து நிற்க வேண்டும். திருக்கோவிலுள் நுழையும் மற்ற எவனும் கொல்லப்படுவான். அரசன் வந்துபோகும் இடமெல்லாம் லேவியர் அவனோடு இருக்க வேண்டும்” என்றார்.⒫8 குரு யோயாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஓய்வுநாளில் பணியேற்போரும், விடுப்பில் செல்வோரும், அவரவர் தம்ஆள்களைக் கூட்டி வந்தனர். ஏனெனில், குரு யோயாதா விடுப்பில் செல்லும் குருக்களைக் கலைந்து போக அனுமதிக்கவில்லை.9 அரசர் தாவீது ஆண்டவரின் இல்லத்தில் வைத்திருந்த ஈட்டிகள் கேடயங்கள், பரிசைகள் முதலியவற்றைக் குரு யோயாதா நூற்றுவர் தலைவர்களிடம் அளித்தார்.10 மக்கள் அனைவரும் படைக்கலன் தாங்கியவராய்த் திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை பலிபீடத்துக்கும் திருக்கோவிலுக்கும் முன்னும், அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.11 பின்னர், அரச மகனை வெளியே அழைத்து வந்து அவனது தலைமேல் மகுடத்தை வைத்து, உடன்படிக்கைச் சுருளை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பிறகு யோயாதாவும் அவர் புதல்வர்களும் அவனைத் திருப்பொழிவு செய்து, ‘அரசே வாழ்க!’ என்று முழங்கினர்.⒫12 மக்கள் ஓடி வந்து அரசனைப் புகழும் பேரொலி கேட்டவுடன், அத்தலியா ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் சென்றாள்.13 ஆனால், வாயில் தூண் அருகில் அரசன் நிற்பதையும், தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அரசனின் அருகில் நிற்பதையும் நாட்டின் எல்லா மக்களும் மனமகிழ்ந்து எக்காளம் ஊதுவதையும், பாடகர்கள் இசைக்கருவிகளுடன் புகழ்ந்துபாடுவதில் முன்னணியில் நிற்பதையும் கண்டவுடன், அத்தலியா தன் ஆடைகளைக் கிழ்த்துக் கொண்டு, “சதி, சதி!” என்று கத்தினாள்.14 பின்னர், குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, “அவளைப் பிடித்துச் சுற்று மதிலுக்குப் புறம்பே கொண்டு போங்கள்; எவனாவது இவளோடு சேர்ந்து கொண்டால், அவனை வெட்டி வீழ்த்துங்கள். ஆண்டவரின் இல்லத்தில் அவளைக் கொன்று போடக் கூடாது” என்று கூறியிருந்தார்.15 அதன்படி அவளைப் பிடித்து அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டுவந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.16 பின்னர், யோயாதா தானும், எல்லா மக்களும், அரசனும் ஆண்டவரின் மக்களாயிருப்பதாக ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.17 அதன்பின், எல்லா மக்களும் பாகாலின் கோவிலில் நுழைந்து அதனை இடித்து, பலிபீடத்தையும் சிலைகளையும் தகர்த்து, பாகாலின் அர்ச்சகன் மாத்தானை பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றொழித்தனர்.18 ஆண்டவரின் இல்லத்தைக் கண்காணிப்போராக தாவீதின் நியமனத்தின்படி லேவிய குருவை யோயாதா நியமித்தார். அவர்கள் மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்தவாறு எரிபலிகளை ஆண்டவருக்குச் செலுத்தி, தாவீதின் சொற்படி ஆர்ப்பரித்துப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டார்.19 மேலும், எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழையாதபடி வாயில் காவலரை அவர் ஏற்படுத்தினார்.⒫20 பின்னர், நூற்றுவர் தலைவர்கள், மேன்மக்கள், மக்களின் ஆளுநர்கள், மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் இல்லத்திலிருந்து உயர் வாயில் வழியாக அரசரை அரண்மனைக்கு அழைத்துச்சென்று, அங்கே அரசரின் அரியணையில் அமர்த்தினர்.21 நாட்டு மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். அத்தலியா வாளுக்கு இரையாகி மாண்டபின், நகரில் அமைதி நிலவிற்று.