2 Chronicles 11 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ரெகபெயாம் எருசலேமுக்குத் திரும்பியவுடன் யூதா, பென்யமின் குலத்தாரில் ஓர் இலட்சத்து எண்பதாயிரம் போர்வீரர்களைத் திரட்டினான்; ஏனெனில், இஸ்ரயேலுடன் போர்தொடுத்து அரசை மீண்டும் கைப்பற்ற விரும்பினான்.2 அப்போது கடவுளின் மனிதரான செமாயாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:3 “யூதா அரசனும் சாலமோனின் மகனுமான ரெகபெயாமிடமும், யூதாவிலும் பென்யமினிலும் வாழும் இஸ்ரயேலர் அனைவரிடமும் நீ சொல்ல வேண்டியது:4 ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் படையெடுத்துச் சென்று, உம் சகோதரருடன் போரிட வேண்டாம். அவரவர் தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; ஏனெனில், என்னாலேயே இச்செயல் நிகழ்ந்தது.” ஆண்டவரின் வாக்கைக் கேட்ட அவர்கள், எரொபவாமுக்கு எதிராகச் செல்வதைக் கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.5 ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன:6 பெத்லகேம், ஏத்தாம், தெக்கோவா,7 பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,8 காத்து, மாரேசா, சீபு,9 அதோரயிம், இலாக்கிசு, அசேக்கா,10 சோரா, அய்யலோன், எபிரோன்; இவையே யூதாவிலும் பென்யமினிலும் கட்டப்பட்ட அரண்சூழ் நகர்கள்.11 அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான்.12 அவன் ஈட்டிகளாலும் கேடயங்களாலும் ஒவ்வொரு நகரையும் மிகவும் வலிமைமிக்கதாக்கினான். இவ்வாறு, ,யூதாவும் பென்யமினும் அவன் பக்கமாய் இருந்தன.13 இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த குருக்களும் லேவியரும் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்து அவனோடு சேர்ந்து கொண்டனர்.14 இவர்கள் ஆண்டவருக்குக் குருத்துவப் பணி செய்யாதவாறு எரொபவாமும் அவன் புதல்வரும் இவர்களை விலக்கி வைத்தனர். எனவே, இவர்கள் தங்கள் மேய்ச்சல் நிலத்தையும் உடைமைகளையும் விட்டுவிட்டு, யூதாவுக்கும் எருசலேமுக்கும் திரும்பிச் சென்றனர்.15 ஏனெனில், எரொபவாம் தன் தொழுகை மேடுகளுக்கும், தான் செய்திருந்த ஆட்டு, கன்றுக்குட்டிச் சிலைகளுக்கும் தானே குருக்களை நியமித்தான்.16 அந்த லேவியரைத் தொடர்ந்து, இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் தம் கடவுளாம் ஆண்டவரை முழு இதயத்தோடு வழிபட விரும்பியோர் தம் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்குப் பலி செலுத்த எருசலேமுக்கு வந்தனர்.17 இவ்வாறு, அவர்கள் யூதாஅரசையும் சாலமோன் மகன் ரெகபெயாம் ஆட்சியையும் மூன்றாண்டுகள் உறுதிப்படுத்தினர்; ஏனெனில், அவர்கள் தாவீது, சாலமோன் நடந்த வழியில் மூன்றாண்டுகளே வாழ்ந்தனர்.18 பின்பு, ரெகபெயாம் தாவீதின் மகன் எரிமோத்துக்கும், ஈசாயின் பேத்தியும் எலியாபின் மகளுமான அபிகயிலுக்கும் பிறந்த மகலாத்து என்பவளை மணந்து கொண்டான்.19 அவள் அவனுக்கு எயூசு, செமரியா, சாகாம் என்ற புதல்வர்களைப் பெற்றெடுத்தாள்.20 அடுத்து, அவன் அப்சலோமின் மகள் மாக்காவை மணந்து கொண்டான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித்து ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.21 ரெகபெயாம் பதினெட்டு மனைவியரையும், அறுபது வைப்பாட்டியரையும் கொண்டிருந்தான்; இவர்கள் மூலம் இருபத்தெட்டுப் புதல்வரையும் அறுபது புதல்வியரையும் பெற்றான். ஆனால், மற்ற எல்லா மனைவியர், வைப்பாட்டியரையும் விட அப்சலோம் மகள் மாக்காவிடம் அவன் மிகுதியாக அன்பு பாராட்டினான்.22 அதனால், ரெகபெயாம் மாக்காவின் மகன் அபியாவை அவன் சகோதரர்களுக்குள் தலைவனாக ஏற்படுத்தியிருந்தான்; இவனையே அரசனாக்கவும் அவன் எண்ணியிருந்தான்.23 அவன் முன்மதியோடு தன் மற்றெல்லாப் புதல்வரையும், யூதா, பென்யமின் நாடுகள் முழுவதிலுமுள்ள அரண்சூழ் நகர்களுக்குப் பிரித்தனுப்பினான். அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருள்களையும், பல மனைவியரையும் ஏற்பாடு செய்தான்.