1 சாமுவேலைப் பற்றியச் செய்தி அனைத்து இஸ்ரவேலருக்கும் பரவியது. ஏலி முதியவனானான். அவனது மகன்கள் தொடர்ந்து கர்த்தருக்கு எதிராக தீய செயல்களைச் செய்து வந்தனர். அந்த காலத்தில், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்யப் போனார்கள். இஸ்ரவேலர் எபெனேசர் என்ற இடத்தில் முகாமிட்டனர். பெலிஸ்தர் தங்கள் முகாம்களை ஆப்பெக்கில் அமைத்தனர்.
2 பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தாக்கும் பொருட்டுத் தயாரானார்கள். போர்த் துவங்கியது. பெலிஸ்தர் இஸ்ரவேலரைத் தோற்கடித்தனர். இஸ்ரவேல் சேனையில் உள்ள 4,000 வீரர்களைப் பெலிஸ்தர் கொன்றனர்.
3 இஸ்ரவேல் வீரர்கள் தங்கள் முகாம்களுக்குத் திரும்பி வந்தனர். மூப்பர்கள், “கர்த்தர் ஏன் பெலிஸ்தர் நம்மைத் தோற்கடிக்கும்படிச் செய்தார்? சீலோவில் உள்ள நமது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம். அதன்படி தேவன் நம்மோடு கூட போர்க்களத்துக்கு வருவார். அவர் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்” என்றனர்.
4 எனவே ஜனங்கள் சீலோவிற்குச் சிலரை அனுப்பினார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தனர். அப்பெட்டியின் மேல் கேருபீன்கள் இருந்தார்கள். அவை கர்த்தர் உட்காரும் சிங்காசனம் போல இருந்தது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் அப்பெட்டியோடு வந்தனர்.
5 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது.
6 பெலிஸ்தர் இஸ்ரவேலர்களின் சத்தத்தைக் கேட்டு, “ஏன் இஸ்ரவேல் முகாமில் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டனர். பின்னர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி முகாமிற்கு கொண்டு வரப்பட்டதை அறிந்துக்கொண்டனர்.
7 பெலிஸ்தர் அதனால் அஞ்சினர். அவர்களோ, “தேவன் அவர்களின் முகாமிற்கு வந்திருக்கிறார்கள். நாம் இக்கட்டில் இருக்கிறோம். இதற்கு முன்பு இதுபோல் நடந்ததில்லை!
8 நாங்கள் கவலைப்படுகிறோம். வல்லமையான இந்தத் தெய்வங்களிடமிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்கள்? இந்தத் தெய்வங்கள் ஏற்கெனவே எகிப்தியர்களுக்கு நோயையும் துன்பங்களையும் கொடுத்தவர்கள்.
9 பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள், ஆண்களைப்போன்றுப் போரிடுங்கள். முற்காலத்தில் இஸ்ரவேலர்கள் நமக்கு அடிமைகளாக இருந்தனர். நீங்கள் ஆண்களைப் போன்று சண்டையிடாவிட்டால் அவர்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள்!” என்றனர்.
10 எனவே பெலிஸ்தர்கள் கடுமையாகச் சண்டையிட்டு இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தனர். ஒவ்வொரு இஸ்ரவேல் வீரனும் தங்கள் முகாமிற்கு ஓடினார்கள். இது இஸ்ரவேலுக்குப் படுதோல்வியாயிருந்தது. 30,000 இஸ்ரவேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
11 பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஓப்னியையும் பினெகாசையும் கொன்று விட்டனர்.
12 அந்த நாளில் பென்யமீனின் கோத்திரத்திலிருந்து ஒருவன் போர்க்களத்திலிருந்து சீலோவிற்கு ஓடிப்போனான். அவன் தனது ஆடையைக் கிழித்தெறிந்தான். தலையின் மேல் புழுதியை அள்ளிப் போட்டுக்கொண்டான். இவ்வாறு அவன் தன் சோகத்தை வெளிகாட்டினான்.
13 இந்த மனிதன் சீலோவிற்கு வந்தபொழுது ஏலி நகர வாசல்களுக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப் பற்றி ஏலி கவலைப்பட்டு, கவனித்துக் காத்திருந்தான். பிறகு பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் சீலோவுக்கு வந்து அந்தக் கெட்டச் செய்தியைக் கூறினான். நகரிலிருந்த ஜனங்கள் அனைவரும் சத்தமாக அழத் துவங்கினார்கள்.
14 ஏலி 98 வயதுடையவன். அவன் குருடன். என்ன நடக்கிறது என்பதை அவனால் காணமுடியவில்லை. ஆனால் அவனால் ஜனங்களின் உரத்த அழுகை சத்தத்தைக் கேட்க முடிந்தது. ஏலி, “ஏன் இவர்கள் இவ்வாறு சத்தமிடுகிறார்கள்?” என்று கேட்டான். பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஏலியிடம் ஓடிவந்து நடந்ததைக் கூறினான்.
16 அவன், “நான் இப்போதுதான் போர்க்களத்திலிருந்து ஓடி வந்தேன்” என்றான். ஏலி அவனிடம், “மகனே! என்ன நடந்தது?” என்று கேட்டான்.
17 அதற்கு அவன், “பெலிஸ்தர்களிடமிருந்து இஸ்ரவேலர்கள் ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படை ஏராளமான வீரர்களை இழந்துவிட்டது. உமது இரு மகன்களும் மரித்துப்போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துக் கொண்டனர்” என்றான்.
18 பென்யமீன் குடும்பத்தைச் சேர்ந்தவன் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைப்பற்றிச் சொன்னதும், ஏலி நாற்காலியிலிருந்து வாசல் பக்கமாய் மல்லாக்காய் விழுந்து தன் கழுத்தை முறித்துக்கொண்டான். அவன் வயதானவனாகவும் சரீரம் பருமனாகவும் இருந்ததால், மரித்துப்போனான். ஏலி இஸ்ரவேல் ஜனங்களை 20 ஆண்டுகள் வழிநடத்தினான்.
19 ஏலியின் மருமகளான பினெகாசின் மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் குழந்தைப் பெறுவதற்குரியக் காலம் அது. தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனதுப் பற்றி அவள் கேள்விப்பட்டாள். அதோடு அவள் தன் கணவனும் தன் மாமனாரும் மரித்துப்போனது பற்றியும் கேள்விப்பட்டாள். உடனே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிக் குழந்தையைப் பெற்றாள்.
20 அவளது பிரசவத்திற்கு உதவிய பெண்ணோ, “கவலைப்படாதே! நீ ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றாள். ஆனால் ஏலியின் மருமகளோ அதைக் கவனிக்கவில்லை, எவ்வித பதிலும் சொல்லவில்லை.
21 அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!” என்பதாகும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள்.
22 அவள், “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று” ஏனென்றால் பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை பறித்துக் கொண்டனர் என்றாள்.
1 Samuel 4 ERV IRV TRV