1 Samuel 21 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்பு, தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், “நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?” என்றார்.2 அதற்கு தாவீது குரு அமெலக்கிடம், “அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். ‘நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று அரசர் கூறியுள்ளார். எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன்.3 உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும்” என்றார்.4 குரு தாவீதை நோக்கி, “தூய அப்பமே என்னிடம் உள்ளது; சாதரண அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்” என்றார்.5 தாவீது குருவை நோக்கி, “சாதாரணப் பயணத்தின் போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவுகொள்வதில்லை; இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்” என்றார்.6 ஆதலால், குரு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்; ஏனெனில், ஆண்டவரின் திரு முன்னிலை அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.⒫7 சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கே இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்குத் தலைவன்.⒫8 அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், “இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டுவரவில்லை,” என்றார்.9 குரு அவரிடம், “ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை” என்று கூறினார். அதற்கு தாவீது, “அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்” என்றார்.⒫10 பிறகு, தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார்.11 ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?” என்றனர்.12 தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார்.13 அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார்.14 அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?15 என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?” என்று சினமுற்றான்.1 Samuel 21 ERV IRV TRV