1 Samuel 16 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தர் சாமுவேலிடம், “நீ எவ்வளவு காலம் சவுலுக்காக வருந்துவாய்? நான் அரச பதவியிலிருந்து புறக்கணித்த பின்னும் வருந்துகிறாயே. உனது கொம்பை எண்ணெயால் நிரப்பு. பெத்லேகேமிற்குச் செல். உன்னை ஈசாயினிடம் அனுப்புகிறேன். அவன் அங்கே இருக்கிறான். அவனது மகன்களில் ஒருவனையே புதிய அரசனாக நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” என்றார்.
2 சாமுவேலோ, “நான் போனால், அதனை சவுல் அறிவான். என்னைக் கொல்ல முயல்வான்” என்றான். கர்த்தர், “பெத்லேகேமிற்கு ஒரு இளம் கன்றுக்குட்டியை எடுத்துக்கொண்டு போ, ‘கர்த்தருக்கு பலி கொடுக்க வந்திருக்கிறேன். என்று சொல்.’
3 ஈசாயையும் பலிக்கு அழைத்தனுப்பு. பிறகு செய்ய வேண்டியது என்ன என்பதைக் காட்டுவேன். நான் காட்டுகிறவனை அரசனாக அபிஷேகம் செய்” என்றார்.
4 சாமுவேல் கர்த்தர் சொன்னபடி செய்தான். சாமுவேல் பெத்லேகேம் சென்றதும் அங்குள்ள மூப்பர்கள் நடுங்கினார்கள். அவர்கள் சாமுவேலை சந்தித்து, “சமாதானத்தோடு வந்துள்ளீரா?” என்று கேட்டனர்.
5 அதற்கு சாமுவேல் “ஆமாம், நான் சமாதானத்தோடு வருகிறேன். நான் கர்த்தருக்கு பலிகொடுக்க வந்துள்ளேன். உங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு என்னோடு பலி செலுத்த வாருங்கள்” என்றான். சாமுவேல் ஈசாயையும் அவனது மகன்களையும் ஆயத்தம் செய்துப் பலியில் பங்குகொள்ள அழைத்தான்.
6 அவர்கள் சாமுவேலிடம் வந்து சேர்ந்ததும் எலியாபைப் பார்த்தான். சாமுவேல் “நிச்சயமாக இவன்தான் கர்த்தரால் தேர்ந் தெடுக்கப்பட்டவன்!” என எண்ணினான்.
7 ஆனால் கர்த்தர் சாமுவேலிடம், “எலியாப் உயரமானவன், அழகானவன். ஆனால் அப்படி சிந்திக்க வேண்டாம். ஜனங்கள் பார்க்கிறபடி தேவன் கவனிக்கிறதில்லை. ஜனங்கள் ஒருவனின் வெளித் தோற்றத்தைப் பார்க்கிறார்கள். கர்த்தரோ அவன் இருதயத்தைப் பார்க்கிறார். எலியாப் சரியானவன் அல்ல” என்றார்.
8 பிறகு ஈசாய் இரண்டாவது மகனான, அபினதாபை அழைத்தான். அவன் சாமுவேலினருகில் நடந்து வந்தபோது சாமுவேல் பார்த்து, “இல்லை, கர்த்தர் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை” எனக் கூறினான்.
9 பிறகு ஈசாய் இன்னொரு மகனான சம்மாவை அழைத்தான். அவனைப் பார்த்து, “கர்த்தர் இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
10 ஈசாய் 7 மகன்களையும் காட்டினான். சாமுவேல் ஈசாயிடம், “இவர்களில் யாரையும் கர்த்தர் தேர்ந்தெடுக்கவில்லை” என்றான்.
11 சாமுவேல் “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” எனக் கேட்டான். அதற்கு ஈசாய், “இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்” என்றான். சாமுவேலோ, “அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது” என்றான்.
12 ஈசாய் ஒருவனை அனுப்பி தன் இளைய மகனை அழைப்பித்தான். இந்த மகன் அழகாய் சிவந்த மயிரோடு நல்ல சொளந்தரிய தோற்றமுடையவனாக இருந்தான். கர்த்தர் சாமுவேலிடம், “எழுந்து அவனை அபிஷேகம் செய், இவன்தான்” என்றார்.
13 சாமுவேல் எண்ணெய் நிரப்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி மகன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். சாமுவேல் ராமாவிலுள்ள தன் வீட்டிற்குத் திருப்பினான்.
14 கர்த்தருடைய ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். கர்த்தர் ஒரு கெட்ட ஆவியை சவுலுக்கு அனுப்பினார். அது மிகத் தொல்லை கொடுத்தது.
15 சவுலின் வேலைக்காரர்களோ, “தேவனிடமிருந்து கெட்ட ஆவி ஒன்று உங்களைத் தொந்தரவு செய்கிறது.
16 ஆணையிடுங்கள், நாங்கள் சுரமண்டலம் வாசிக்கும் ஒருவனைத் தேடிப்பிடிப்போம். ஒருவேளை கர்த்தரிடமிருந்து கெட்ட ஆவி உங்கள் மீது வருமானால், உமக்காக அவன் இசை மீட்டுவான். அப்போது நீங்கள் நலம் பெறுவீர்கள்” என்றனர்.
17 எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான்.
18 ஒரு வேலையாள், “ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது மகனுக்கு நன்றாக சுர மண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார்” என்றான்.
19 எனவே சவுலின் ஆட்கள் ஈசாயிடம் சென்றனர். அவர்கள் ஈசாயிடம், “ஆட்டைக் காக்கிற உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்புங்கள்” என்று சொன்னார்கள்.
20 எனவே ஈசாய் சில அன்பளிப்புகளாக கழுதை, அப்பம், திராட்சைரசம், இளம் வெள்ளாட்டுக்குட்டி ஆகியவற்றை தாவீதுக்கு கொடுத்து சவுலிடம் அனுப்பினான்.
21 தாவீது சவுல் முன்பு போய் நின்றான். சவுலுக்கு தாவீதை மிகவும் பிடித்தது. அவன் சவுலின் ஆயுதங்களைச் சுமக்கும் உதவியாளனானான்.
22 அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.
23 எப்பொழுதாவது தேவனிடத்திலிருந்து சவுல் மேல் கெட்ட ஆவி வந்தால், தாவீது தன் சுரமண்டலத்தை மீட்டுவான். அப்போது அந்த கெட்ட ஆவி சவுலை விட்டு போய்விடும், சவுலும் நலம் பெறுவான்.