1 Kings 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.2 அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய ‘ஏத்தானிம்’ மாதத்தின் பண்டிகையின் போது, அரசர் சாலமோன் முன் கூடினர்.3 இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர்.4 ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர்.5 அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர்.6 பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர்.7 அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன.8 தண்டுகள் நீளமாய் இருந்ததால், அவற்றின் முனைகள் கருவறைக்கு முன்னுள்ள தூயகத்திலிருந்து காணக் கூடியவையாய் இருந்தன; ஆனால், வெளியினின்று தெரியாது. இன்றுவரை அந்தத் தண்டுகள் அங்கேதான் இருக்கின்றன.9 இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை.⒫10 குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.11 அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில், ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று.12 அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர்.13 நீர் என்றென்றும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்” என்றார்.14 பின்னர், அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.15 அப்போது அவர் உரைத்தது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் என் தந்தை தாவீதுக்கு வாயால் உரைத்ததைக் கையால் செய்து முடித்தார்.16 ‘என் மக்களாகிய இஸ்ரயேலை எகிப்திலிருந்து அழைத்து வந்த நாள் முதல் இன்றுவரை, என் பெயர் விளங்கும்படி ஒரு கோவிலைப் கட்டுவதற்காக, இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்குச் சொந்தமான எந்த நகரையும் நான் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால், தாவீதாகிய உன்னை என் மக்களாகிய இஸ்ரயேலை ஆளும்படி தேர்ந்து கொண்டேன்.’17 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது.18 ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கிறது. அது நல்லதுதான்,19 ஆயினும், நீ அக்கோவிலைக் கட்டபோவதில்லை. உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கு அக்கோவிலைக் கட்டுவான்’ என்றார்.20 இவ்வாறு, ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன்.21 இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்.”22 பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி23 அவர் மன்றாடியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.24 நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு உரைத்ததை நிறைவேற்றினீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று கையால் செய்து முடித்தீர்.25 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, “நீ என்னை மறவாமல் நடந்து கொண்டதுபோல் உன் பிள்ளைகள் என்னை மறவாது தக்க நெறியில் நடப்பார்களேயாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க அவர்களுள் ஒருவன் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொன்னதை நிறைவேற்றும்!26 இஸ்ரயேலின் கடவுளே! உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தை நிலை பெறுவதாக!⒫27 கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்?28 என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!29 ‘என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்’ என்று இக்கோவிலைப்பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!30 உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!31 ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கோவிலில் உமது பீடத்தின் முன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,32 விண்ணிலிருந்து நீர் அதைக் கேட்டுச் செயல்பட்டு உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக! தீயவரை தீயவராகக் கணித்து, அதற்குரிய பழியை அவர் தலைமேல் சுமத்துவீராக! நேர்மையானவருக்கு அவரது நேர்மைக்குத் தக்கவாறு, அவர் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!⒫33 உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உம் திருப்பெயரை ஏற்றுக்கொண்டு இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால்,34 விண்ணிலிருந்து நீர் அவர்களுக்கு செவிசாய்த்து உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையர்க்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச் செய்வீராக!35 அவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது அவர்கள் இவ்விடத்தை நோக்கி வேண்டுதல் செய்து, உம் பெயரை ஏற்றுக் கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் பாவம் செய்வதிலிருந்து மனம் மாறினால்,⒫36 விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரும் செய்த பாவத்தை மன்னிப்பீராக! அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டுவீராக! நீர் உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக!37 நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும் போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி ஆகியவற்றால் பயிர் அழிவுறும் போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும் போதும், கொள்ளை நோயோ வேறெந்த நோயோ வரும் போதும்,38 உம் மக்களாகிய இஸ்ரயேலருள் யாராவது மனம் நொந்து, இக்கோவிலை நோக்கித் தம் கைகளை உயர்த்திச் செய்யும் எல்லா வேண்டுதலுக்கும், விண்ணப்பத்திற்கும்,39 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்.40 இதனால், அவர்கள் தங்கள் மூதாதையருக்கு நீர் அளித்த நாட்டில் தம் வாழ்நாள் எல்லாம் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.⒫41 இஸ்ரயேல் மக்களைச் சாராத அந்நியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,42 மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால்,43 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அந்நியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால் உலகின் மக்கள் எல்லோரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரைப் போல், உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள். மேலும் நான் எழுப்பியுள்ள இக்கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்.44 உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும் பொழுது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில் நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் காட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால்,45 விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக!46 அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தால் — பாவம் செய்யாத மனிதர் ஒருவருமில்லை — நீர் அவர்கள்மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளிடம் ஒப்படைக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டால்,47 அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி ‘நாங்கள் பாவம் செய்தோம்; நெறி தவறினோம்; தீய வழியில் நடந்தோம்’ என்று விண்ணப்பம் செய்தால்,48 தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையர்க்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும், உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி நின்று, உம்மிடம் வேண்டுதல் செய்தால்,49 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! உமக்கு எதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னிப்பீராக! உமக்கு எதிராக அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் மன்னிப்பீராக!50 அவர்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றவர்களின் பார்வையில் நீர் அவர்களுக்குக் கருணை காட்டும்! இதனால் அவர்களும் உம் மக்களுக்குக் கருணை காட்டுவார்களாக!51 ஏனெனில், அவர்கள் உம்முடையவர்கள், உமது உரிமைச் சொத்து. அவர்களை எகிப்து என்ற இரும்பு உலைக்களத்தினின்று நீர் அழைத்து வந்தீர்!⒫52 உம் அடியானின் விண்ணப்பத்திற்கும்; உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக!53 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! நீர் எம் மூதாதையரை எதிப்திலிருந்து அழைத்து வந்தபோது, உம் ஊழியர் மோசேயைக் கொண்டு நீர் சொன்னபடியே செய்திருக்கிறீர்! உமது உரிமைச் சொத்தாக இருக்குமாறு உலகின் எல்லா இனத்தவரிடமிருந்தும் அவர்களையே நீர் பிரித்தெடுத்தீர்!”⒫54 இவ்வாறு, சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் சொல்லி, மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின்முன் எழுந்துநின்றார்.55 மேலும், அவர் இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கி உரத்த குரலில் சொன்னது:56 “தாம் வாக்களித்தபடியெல்லாம் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியை அருளிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் தம் ஊழியர் மோசேயின் மூலம் கொடுத்த நல்வாக்குகள் அனைத்தும் நிறைவேறின; ஒன்றேனும் பொய்க்கவில்லை.57 நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரோடு இருந்தது போல, நம்மோடும் இருப்பாராக! நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டுப் பிரியாமலும் இருப்பாராக!58 நம் மூதாதையருக்கு அவர் கொடுத்த விதிமுறைகளையும் நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் நாமும் கடைப்பிடித்து, அவர் வகுத்த வழிகளிலெல்லாம் நடக்கும் வண்ணம் நம் உள்ளங்களைத் தம் பக்கம் ஈர்ப்பாராக!59 ஆண்டவர் முன்னிலையில் நான் செய்த இவ்விண்ணப்பம் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் அருகில் இருப்பதாக! அவர் அடியேனுக்கும் நம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் நாள்தோறும் தேவைக்கேற்ப நீதி வழங்குவாராக!60 ‘ஆண்டவரே கடவுள்; வேறு எவரும் இல்லை’ என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!61 நீங்களும் இன்றுபோல் அவருடைய நியமங்களின்படி நடக்கவும், விதி முறைகளைக் கடைப்பிடிக்கவும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உங்கள் உள்ளம் முற்றிலும் பணிந்திருப்பதாக!”62 பின்பு, அரசரும் அவருடன் இருந்த இஸ்ரயேலர் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் பலி செலுத்தினர்.63 சாலமோன் ஆண்டவர் முன்னிலையில் இருபத்திரண்டாயிரம் காளைகளையும், ஓர் இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினார். இவ்வாறு செய்து, அரசரும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.64 ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் மிகச் சிறியதாய் இருந்தது. எனவே, அரசர் ஆண்டவரது இல்லத்தின் முன்னேயுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை இந்த நாளன்று திருநிலைப்படுத்தி அங்கே எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப்பலிகளின் கொழுப்பையும் படைத்தார்.65 அந்த நாள்களில் சாலமோனும் இலெபோயாமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் ஓடை வரையுள்ள பகுதிகளிலிருந்து வந்த இஸ்ரயேல் சபையார் அனைவரும், அவரோடு சேர்ந்து ஆண்டவர் முன்னிலையில் விழாக்கொண்டாடினர். இந்த விழா ஏழு நாள்கள்* கொண்டாடப்பட்டது.⒫66 எட்டாம் நாளன்று அவர் மக்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அரசரை வாழ்த்தி ஆண்டவர் தம் அடியார் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ரயேலருக்கும் செய்தருளிய எல்லா நன்மைகளையும் நினைத்து மகிழ்ச்சியோடும் உள்ளத்து உவகையோடும் தம் இல்லங்களுக்குத் திரும்பினார்கள்.