1 ⁽பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.⁾

2 ⁽ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.⁾

3 ⁽ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.⁾

4 ⁽நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.⁾

5 ⁽தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.⁾

6 ⁽முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.⁾

7 ⁽அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.⁾

8 ⁽அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.⁾

9 ⁽ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.⁾

10 ⁽நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.⁾

11 ⁽செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.⁾

12 ⁽நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.⁾

13 ⁽தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்.⁾

14 ⁽எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார்.⁾

15 ⁽கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.⁾

16 ⁽அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.⁾

17 ⁽கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.⁾

18 ⁽நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.⁾

19 ⁽உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.⁾

20 ⁽உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.⁾

21 ⁽ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.⁾

22 ⁽பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.⁾

23 ⁽முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.⁾

24 ⁽பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.⁾

25 ⁽பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.⁾

26 ⁽தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.⁾

27 ⁽ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.⁾

28 ⁽பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.⁾

Proverbs 28 ERV IRV TRV