சங்கீதம் 86

fullscreen1 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

fullscreen2 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.

fullscreen3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.

fullscreen4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

fullscreen5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

fullscreen6 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

fullscreen7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

fullscreen8 ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

fullscreen9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

fullscreen10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

fullscreen11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

fullscreen12 என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

fullscreen13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

fullscreen14 தேவனே அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.

fullscreen15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

fullscreen16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

fullscreen17 கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும்.