நெகேமியா 5

fullscreen1 ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று.

fullscreen2 அதென்னவென்றால், அவர்களில் சிலர் நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள்.

fullscreen3 வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

fullscreen4 இன்னும் சிலர் ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்;

fullscreen5 எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

fullscreen6 அவர்கள் கூக்குரலையும், இந்தவார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு,

fullscreen7 என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,

fullscreen8 அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

fullscreen9 பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?

fullscreen10 நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக.

fullscreen11 நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்.

fullscreen12 அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

fullscreen13 நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.

fullscreen14 நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.

fullscreen15 எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

fullscreen16 ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.

fullscreen17 யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.

fullscreen18 நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.

fullscreen19 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.