நியாயாதிபதிகள் 4

fullscreen1 ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

fullscreen2 ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான்.

fullscreen3 அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

fullscreen4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்.

fullscreen5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள்.

fullscreen6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,

fullscreen7 நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.

fullscreen8 அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

fullscreen9 அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.

fullscreen10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள்.

fullscreen11 கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

fullscreen12 அபினோகாமின் குமாரன் பாராக்தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது,

fullscreen13 சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லாரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான்.

fullscreen14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

fullscreen15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.

fullscreen16 பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

fullscreen17 சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

fullscreen18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

fullscreen19 அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்;

fullscreen20 அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

fullscreen21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

fullscreen22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

fullscreen23 இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.

fullscreen24 இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.