எஸ்தர் 5

fullscreen1 மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

fullscreen2 ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

fullscreen3 ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

fullscreen4 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.

fullscreen5 அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.

fullscreen6 விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

fullscreen7 அதற்கு எஸ்தர் பிரதியுத்தரமாக:

fullscreen8 ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

fullscreen9 அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

fullscreen10 ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,

fullscreen11 தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.

fullscreen12 பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.

fullscreen13 ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

fullscreen14 அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.