எஸ்தர் 4

fullscreen1 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

fullscreen2 ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

fullscreen3 ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

fullscreen4 அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.

fullscreen5 அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

fullscreen6 அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

fullscreen7 அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,

fullscreen8 யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.

fullscreen9 ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.

fullscreen10 அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது:

fullscreen11 யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

fullscreen12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

fullscreen13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

fullscreen14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

fullscreen15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது.

fullscreen16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

fullscreen17 அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.