பிரசங்கி 6

fullscreen1 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

fullscreen2 அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

fullscreen3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

fullscreen4 அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.

fullscreen5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.

fullscreen6 அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா?

fullscreen7 மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

fullscreen8 இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?

fullscreen9 ஆசையானது அலைந்துதேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.

fullscreen10 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.

fullscreen11 மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?

fullscreen12 நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?